கீழக்கரையில் சட்ட விரோத மது விற்பனை: உறக்கத்தில் போலீசார்

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்காமல் போலீசார் உறக்கத்தில் உள்ளனர்.

கீழக்கரை நகரில் 2019ல் இரண்டு டாஸ்மாக் கடைகள் முழுமையாக அகற்றப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பல்வேறு சமூக நல அமைப்புகளின் சார்பில் கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் மற்றும் பெண்கள், பள்ளி மாணவிகள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு 2019ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சேதமடைந்த மீன்கடை பஜார், கடற்கரைப் பகுதிகளில் சட்ட விரோதமாக விற்கின்றனர்.

கீழக்கரை பஸ்ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் காலை மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் குடிமகன்கள் மதுபானம் அருந்துகின்றனர். மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்யாமல் உறக்கத்தில் இருப்பது அதிக மது விற்பனைக்கு காரணமாகி உள்ளது.

தன்னார்வலர்கள் கூறுகையில், கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிசைத் தொழில் போல ஏராளமானோர் திருப்புல்லாணி, ஏர்வாடி பகுதிகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து குவாட்டருக்கு ரூ.50 வீதம் கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.

மதுவிலக்கு போலீசார் கண்டும் காணாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு மது விற்பனையை தட்டி கேட்ட சமூக ஆர்வலரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினர். எனவே கீழக்கரை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement