கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி லிங்கமுத்து கடன் தொல்லையால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
கடலாடி அருகே பாப்பாகுளம் குழந்தைவேல் மகன் லிங்கமுத்து 44. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, சிலர் கடனை திருப்பி கேட்டு மிரட்டுவதால் வாழ முடியவில்லை என திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து பெட்ரோல் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் லிங்கமுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்ககூட்டம் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும் பணம் கேட்டு தன்னையும், குடும்பத்தினரையும் தொடர்ந்து அவர் மிரட்டி சித்ரவதை செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், மீண்டும் இது போல் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.