பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் மழைநீர் செல்வதற்கு வழியில்லை: பராமரிப்பின்றி புதர்மண்டிய வாய்க்கால்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகர், ஓம்சக்தி நகர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வடிகால்கள், தரைப்பாலங்கள் பராமரிப்பின்றி புதர்மண்டி அடைப்பு ஏற்பட்டதால் லேசான மழை பெய்தாலும் குளம்போல தண்ணீர் தேங்குகிறது. மழை நீரை ஊருணிகளில் சேகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள ஓம்சக்திநகர், சேதுபதிநகரில் ஏராளமான குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதியில் மழை நீரை வெளியேற்றுவதற்கான வடிகால்கள் பராமரிப்பின்றி புதர்மண்டியுள்ளது.

இதே போல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ெஹலிபேடு தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேங்கும் மழைநீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்வதற்காக தனியாக ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் வாய்க்கால் அமைத்தும், தேவையுள்ள பகுதிகளில் குழாய்கள் பதித்து தரைப்பாலங்கள் கட்டியுள்ளனர். இவை சரிவர பராமரிக்கப்படாமல் புதர்மண்டி வாய்க்கால்களில் குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓம்சக்திநகர், சேதுபதிநகர் ரோடு, குடியிருப்புகளில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது.

மழை நீர் ஊருணிகளுக்கு செல்ல வழியின்றி கலெக்டர் அலுவலக வளாகம், அரசு மருத்துவக்கல்லுாரி எதிரிலும், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகள், ஆயுதப்படை மைதானம் அருகே காலி இடங்களில் குளம் போல் தேங்குகிறது.

தொடர்ந்து பல நாட்களாக தேங்குதால் அவ்விடங்கள் கொசுக்கள் உற்பத்தி மையமாகியுள்ளன. எனவே கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி செல்வதற்கு வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து சோத்துாருணியில் மழைநீரை சேமிக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement