விபத்தில் இளைஞர் பலி ஸ்டிக்கரால் சிக்கியது கார்
திகளரபாளையா: இளைஞர் மரணத்திற்கு காரணமான காரை, அதில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து, போலீசார் கண்டுபிடித்தனர்.
பெங்களூரின் திகளரபாளையா பிரதான சாலையில், நவம்பர் 13ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், சசிகுமார், 20, என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு எதிரே கார், அதிவேகமாக வருவதை பார்த்து அச்சம் அடைந்து தடுமாறினார்.
இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்தது. சசிகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பைக் 100 மீட்டர் துாரம் சென்று விழுந்தது. சிவகுமார் கீழே விழுந்திருப்பது தெரிந்தும், ஓட்டுனர் காரை நிறுத்தாமல், அவர் மீதே ஏற்றிச் சென்றார்.
படுகாயமடைந்த சிவகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த காமாட்சி பாளையா போக்குவரத்து போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனரை கண்டுபிடிக்க முயற்சித்தனர். ஆரம்பத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
கண்காணிப்பு கேமராவில், விபத்து எப்படி நடந்தது என்பது பதிவாகி இருந்ததே தவிர, வாகனத்தின் பதிவு எண் பதிவாகவில்லை. காரின் ஒரு கதவுக்கு மட்டுமே, சேப்டி கார்டு இருப்பதையும், முன்புற சக்கரத்துக்கு மட்டும் 'வீல் கேப்' இருப்பதையும் கவனித்தனர்.
காரின் பின்புற கண்ணாடியில், 'எம்.எஸ்.,' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஸ்டிக்கரை வைத்து, காரை தேட துவங்கினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, பார்லேஜி சுங்கச்சாவடி வரை 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு கேமராவில் அந்த கார் தென்பட்டது.
அதை வைத்து விசாரணை நடத்தி, காரையும், ஓட்டுனர் காஜா மொஹிதீனையும் கண்டுபிடித்து, ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவில், நேற்று காலையில் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
***