பந்தயம் கட்டாதீர்கள்! நிகில் வேண்டுகோள்
ஹாசன்: ''தேர்தலில் வெற்றி, தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்டி, பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டாம். மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து, உறங்குங்கள்,'' என, கட்சித் தொண்டர்களை, சென்னபட்டணா ம.ஜ.த., வேட்பாளர் நிகில் அறிவுறுத்தி உள்ளார்.
ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணாவில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று நிகில், அவரது மனைவி ரேவதி, மகன் அவ்யன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின், நிகில் அளித்த பேட்டி: தேர்தல் முடிவு குறித்து யாரும் பந்தயம் கட்ட வேண்டாம்.
பந்தயம் கட்டி, பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டாம். மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு உறங்குங்கள். ஊடகம் மூலம் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் ஆசியுடன் கடவுள் வெற்றி பெறுவார். என் வெற்றிக்காக, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள், ரசிகர்கள் உழைத்துள்ளனர். ம.ஜ.த., கட்சி வரலாற்றில், இப்படி ஒரு தேர்தல் நடந்ததில்லை. இந்த தேர்தல், வரலாற்று பக்கங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.
சென்னபட்டணாவுக்கு, 1,200 கோடி நிதி வழங்கி, தொகுதியை மேம்படுத்தி உள்ளனர். தொகுதி மக்கள், எனக்கு ஆசி வழங்கினால், வரும் நாட்களில் இளைஞர் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிப்பேன்; அத்துடன் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.