தர்ம யுத்தத்தில் முதல்வருக்கு வெற்றி பா.ஜ., வர்த்துார் பிரகாஷ் நம்பிக்கை

கோலார்: ''முடா முறைகேடு குற்றச்சாட்டு போராட்டத்தில், முதல்வர் சித்தராமையா வெற்றி பெறுவார்,'' என, பா.ஜ., தலைவர் வர்த்துார் பிரகாஷ் கூறியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் நகரில், கனகதாசர் ஜெயந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜ., தலைவர் வர்த்துார் பிரகாஷ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இது கலியுகம். தர்ம யுத்தம் நடக்கிறது. முடா யுத்தத்தில் முதல்வர் சித்தராமையா வெற்றி பெறுவார். நான் ஜாதியை நேசிப்பவன். காங்கிரசில் சேரமாட்டேன். லோக் ஆயுக்தா விசாரணையில், அவருக்கு 'கிளீன் சிட்' கிடைக்கும்.

முதல்வரின் மனைவி பார்வதி, செய்யக்கூடாத தவறை செய்யவில்லை. பார்வதி, என் தாய்க்கு சமமானவர். அவர் மீது வழக்குப் பதிவானது, எனக்கு கஷ்டமாக உள்ளது. முடா முறைகேடு குறித்து, சித்தராமையா மீது வழக்குப் பதிவானதில், எனக்கு வருத்தம் இல்லை. அவர் அரசியல்வாதி.

சித்தராமையா இல்லாமல், காங்கிரஸ் இல்லை. அவருக்கு ஆதரவாக, நாம் போராட வேண்டும். அவர் முதல்வராக வேண்டும் என, விரும்பியவனே நான். தற்போது இவர் மீது, எழுந்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தேவையின்றி, சித்தராமையாவை திட்டக் கூடாது. கோலார் லோக்சபா தொகுதியில், 3 லட்சம் ஓட்டுகள் எங்களுடன் உள்ளன. குருபர் சமுதாயத்தினர் விழிப்புடன் உள்ளனர். இதை மனதில் கொண்டு, போராட்டம் நடத்துங்கள். மாநிலத்தில் சித்தராமையா மீது 7 கோடி மக்களின் அன்பு உள்ளது. நான் பா.ஜ.,வில் இருக்கிறேன். எனவே அவருக்கு ஆதரவாக, என்னால் போராட்டம் நடத்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையாவிடம் ராஜினாமா கேட்டு, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இடைத்தேர்தல் முடிவு வெளியான பின், முடா தொடர்பாக போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ., தலைவரான வர்த்துார் பிரகாஷ், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசுவது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement