தர்மபுரியில் தாய், சேய் இறப்பு விவகாரத்தில் தனியார் மருத்துவமனை 'கிரேடு' குறைப்பு

தர்மபுரி: 'மகப்பேறு சிகிச்சையின் போது, தாய், சேய் இறந்த விவகாரம் தொடர்பாக, தர்மபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையின் கிரேடு குறைக்கப்பட்டுள்ளது' என, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.




தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த பழைய புதுரெடியூரை சேர்ந்த விவசாயி கோகுலகிருஷ்ணன், 27. இவர் மனைவி சந்தியா, 23. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமான அவர், பிரசவத்திற்காக கடந்த, 13 நள்ளிரவு, 12:30 மணிக்கு, தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சந்தியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றிலிருந்த சிசு இறந்து பிறந்ததாக, செவிலியர்கள் தெரிவித்தனர். பின் உறவினர்களின் அனுமதி பெறாமல், சந்தியாவை ஆம்புலன்ஸ்சில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில், மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர்கள் சந்தியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறி, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்நிலையில், தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:




தர்மபுரியில், பென்னாகரம் சாலையிலுள்ள விஜயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லெவல் - 3 என்ற மல்டி ஸ்பெஷாலிட்டி தகுதியுடன் செயல்பட்டது. இந்நிலையில், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் மகப்பேறு மரணம் அடிப்படையில், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட லெவல், 3 கிரேடு தற்காலிகமாக லெவல் - 2 ஸ்பெஷாலிட்டி என குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு ஸ்பெஷாலிட்டி தகுதி வழங்கப்பட்டுள்ள சிகிச்சை மட்டும் அளிக்க வேண்டும். மேலும், பிரசவத்தின் போது, கூடுதல் மகப்பேறு மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement