ரூ.2.50 கோடி தருவதாக கூறி பூ வியாபாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி: அரசு பஸ் டிரைவர் கைது

நாமக்கல்: பூ வியாபாரியிடம், 2.50 கோடி ரூபாய் தருவதாக கூறி, ஒரு லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த, நாமக்கல் அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம், வண்டிக்கார தெருவை சேர்ந்த குமரவேல் மனைவி நந்தினி, 42; நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில், பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை மேலகோனார் தெருவை சேர்ந்த பாலமுருகன், 49, அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார். நந்தினியின் பூ கடையில் பூ வாங்கி செல்வதன் மூலம், நன்கு அறிமுகமானார்.


இவர், கடந்த, இரண்டு மாதத்திற்கு முன், நந்தினியிடம், 'சேலத்தை சேர்ந்த பாபுஜிக்கு, ஆஸ்திரேலியாவில் உலோகம் விற்ற பணம், 90,000 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில், மத்திய அரசுக்கு வரி கட்டியது போக மீதமுள்ள, 30,000 கோடி ரூபாய்க்கு வரவு-செலவு கணக்கு காட்ட, டிரஸ்ட் மூலம் கிராமத்தில் உள்ள மக்களின் வங்கி கணக்கில், ஒரு நபர் ஒரு டோக்கனுக்கு, 20,000 ரூபாய் கட்டினால், அவர்களது வங்கி கணக்கில், ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்படும். அதில், ஐம்பது லட்சம் ரூபாயை, பாபுஜிக்கு கொடுத்துவிட வேண்டும். நான்கு லட்சம் ரூபாய்க்கு வரி கட்ட வேண்டும். மீதி, 46 லட்சம் ரூபாயை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதுபோல் பலர் பணம் பெற்றுள்ளனர். ஒருவர், ஒன்று முதல், ஐந்து டோக்கன் வரை போட்டுக்கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.
அதன்படி, நந்தினியிடம், 'ஐந்து டோக்கன் வரை போடுங்கள்; 2.50 கோடி ரூபாய் வரை உங்களுக்கு வரும்' என தொடர்ந்து, ஒரு மாதமாக வற்புறுத்தி வந்துள்ளார். அவரது பேச்சை நம்பிய நந்தினி, கடந்த அக்., 2ல், 5,000 ரூபாய், 13ல், 20,000 ரூபாய், கடந்த, 4ல், 45,000 ரூபாய் என, 'ஜிபே' மூலம் பணம் அனுப்பியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன், நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, 30,000 ரூபாய் ரொக்கம் என, மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கிடையே, டிரைவர் பாலமுருகன், இதுபோல் பலரிடம் ஆசைவார்த்தை கூறி கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்தது தெரியவந்ததும், நந்தினி அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதில், 2.50 கோடி ரூபாய் தருவதாக கூறி மோசடி செய்து ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். அவரது புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து, அரசு பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement