திருத்தணியில் திருமண மண்டப கழிவு; சாலையோரம் கொட்டினால் நோட்டீஸ்
திருத்தணி ; திருத்தணி நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன.
இதன் உரிமையாளர்கள், மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் இலைகள் மற்றும் மண்டப கழிவுகளை தனியாக சேகரித்து உரம் தயாரிக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.
மேலும், நகராட்சி ஆணையர், அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து, மண்டப கழிவுகளை சாலையோரம் கொட்டக்கூடாது தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதுடன், மண்டபத்திற்கு 'சீல்' வைக்கப்படும் என அறிவுறுத்தினார்.
ஆனால், சில தனியார் மண்டப உரிமையாளர்கள் நகராட்சியின் உத்தரவை மீறி, சாலையோரம் சாப்பாடு இலைகளை கொட்டுகின்றனர். இதனால், கால்நடைகள், பன்றிகள் வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
மேலும், துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையோரம் கொட்டும் திருமண மண்டப கழிவுகளை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு, ஏற்கனவே சாப்பாடு இலைகள் மற்றும் கழிவுகள் கொண்டு தனியாக உரம் தயாரிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றாலும் சாப்பாடு இலைகள், கழிவுகளை மண்டபத்தில் பாதுகாத்து வைத்து, நகராட்சி வாகனம் வரும் போது கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதை மீறும் மண்டப உரிமையாளர்களுக்கு, ஓரிரு நாளில் 'நோட்டீஸ்' வழங்கப்படும். அப்போதும் தவறு செய்தால், அபராதம் அல்லது 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.