இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
புதுச்சேரி: இ.சி.ஆர். சென்டர் மீடியனில் அனுமதியின்றி திருமண டிஜிட்டல் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், நகராட்சிகள் கடுமையாக எச்சரித்து வருகின்றன.
இதனை பொருட்படுத்தாமல் கல்யாணம், பிறந்தநாள் கோஷ்டிகள் சாலைகளை ஆக்கிரமித்தும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் டிஜிட்டல் பேனர் மற்றும் கட் அவுட்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலை சென்டர் மீடியன், மின் கம்பங்கள், ஹைமாஸ், போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் என எதையும் விட்டு வைக்காமல் சட்ட விரோதமாக முதல்வர், அமைச்சர்கள் படங்களை போட்டு திருமண வரவேற்பு டிஜிட்டல் பேனர்களை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் இ.சி.ஆரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைத்த எல்லைப்பிள்ளை சாவடி, 100 அடி சாலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.