பரோல் விடுமுறை தர கெடுபிடி கைதிகள் சமையல் செய்ய மறுப்பு
புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதிகளுக்கு பரோல் விடுமுறை அளிக்க மறுப்பதை கண்டித்து சமையல் செய்யும் பணியை புறக்கணித்தனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி அரசின் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் கமிட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தண்டனை கைதிகள் கருணா, வெங்கடேஷ் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இருவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கருணா, வெங்கடேஷ் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறையில் தண்டனை கைதிகள் மூலம் மற்ற கைதிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது. தண்டனை கைதிகள் சிலருக்கு பரோல் விடுமுறை அளிக்க சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, இதனால் தண்டனை கைதிகள் உணவு சமைக்க மாட்டோம் என போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் விசாரணை கைதிகள் மூலம் உணவு சமைத்து வழங்கி வருகின்றது.