தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் ; திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளிக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டது.

திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் தனியார் பள்ளி செயல்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த இ மெயிலில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, மாணவர்களை அழைத்துக் கொண்டு செல்ல அறிவுறுத்தியது. பதட்டத்துடன் வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றனர். பள்ளிக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டது.

வெடி குண்டு மிரட்டல் குறித்து தகவல் அளித்து நல்லுார் போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். மாணவர்களின் புத்தகப் பை உள்ளிட்டவை மைதானத்தில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டு பிடிப்பு மற்றும் செயலிழப்பு சிறப்பு போலீசார் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையில் இவற்றை சோதனை செய்தனர். பள்ளி வளாகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.ஏறத்தாழ, ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில், எந்த விதமான வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதியில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது. இ-மெயில் கடிதத்தின் அடிப்படையில் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement