நிரம்பும் நிலையில் அமராவதி அணை; கனமழையால் நீர்மட்டம் உயர்வு

உடுமலை ; உடுமலை அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், கடந்த இரு நாட்களில் அணை நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 87.01 அடி நீர்மட்டம் இருந்தது.

மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,777.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,217 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 308 கனஅடி நீர் திறக்கப்பட்டது.அணை நிரம்ப, இரண்டு அடி மட்டுமே உள்ளதால், அணை நீர்வரத்தை பொருத்து உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் அணை நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement