ஈஷா புத்துணர்வு கோப்பை-2024 விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

திருபுவனை: புதுச்சேரி திருபுவனையில் 16வது ஈஷா கிராமோத்சவம் சார்பில் தென்னிந்திய அளவிலான 'புத்துணர்வு கோப்பை-2024' க்கான முதல் கட்ட கிராமிய விளையாட்டு திருவிழா நடந்தது.

திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.

கைப்பந்துப் போட்டியில் புதுச்சேரி மற்றும் தமிழக அளவில் 26 அணியினர் கலந்துகொண்டனர். போட்டிகளை இஷா யோகா மைய தன்னார்வலர் பன்னீர்செல்வம் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

நடுவர்கள் தரணி, அருண்ராஜ், சங்கரநாராயணன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் தமிழக பகுதியான தென்னவராயன்பட்டு ஜாலி பிரண்ட்ஸ் அணியினர் முதல் இடத்தையும், வாக்கூர் பாலா பிரண்ட்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

இதன் பரிசளிப்பு விழாவிற்கு பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தாகூர் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் பிரசாத் வரவேற்றார்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, சென்னை ஆவடி காவல்துறை இணை ஆணையர் கண்ணபிரான் ஆகியோர் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினர்.

தொடர்ந்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் வரும் நவம்பர் 28ம் தேதி கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement