கவன ஈர்ப்பு போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.
கல்வித்துறை அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு, பொதுச் செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். தலைவர் ராஜன், கவுரவத் தலைவர் வின்சென்ட்ராஜ் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன். செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் முனுசாமி, கவுரவத் தலைவர் பிரேமதாசன் உள்ளிட்ட அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், சம்மேளன பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கோர்ட் மூலம் பணிநிரந்தரம் செய்ய ஆணையை பெற்று வந்துள்ள ஆசிரியர்களுக்கு, இனியும் காலம் கடத்தாமல் பணி நியமன ஆணையை உடனடியாக கல்வித்துறை இயக்குனர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.