விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ரூ. 2.34 கோடி
முதல்வர் ரங்கசாமி வழங்கல்
புதுச்சேரி: விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய தொகையாக ரூ. 2.34 கோடி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி மானிய தொகை காசோலையை விவசாயிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் து றை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., வேளாண்துறை கூடுதல் இயக்குநர் ஜாகீர்உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல், மணிலா வகைகள், சிறுதானிய பயிர்கள், கரும்பு, பருத்தி மற்றும் தீவன புல் முதலியவற்றிற்கு உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது சொர்ணவாரி போகத்தில் உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம் வீதம் பயிரிட்ட 2,558 விவசாயிகளுக்கு ரூ. 2.16 கோடி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000 மானியம் வீதம் 3 விவசாயிகளுக்கு ரூ. 17.12 ஆயிரம் பொது பிரிவு விவசாயிகளுக்கு மானிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
சொர்ணவாரி போகத்தில் உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்கள் ஏக்கருக்கு ரூ. 6000 மானியம் வீதம், பயிரிட்ட 205 அட்டவணை இன விவசாயிகளுக்கு, ரூ. 14.21 லட்சம் உற்பத்தி ஊக்க தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த விதை உற்பத்தி சான்றளிப்பு திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தி செய்யும் விதை உற்பத்தியார்களுக்கு சான்று விதைக்கு கிலோவிற்கு ரூ. 8 மற்றும் ஆதார விதைக்கு ரூ. 12 மானியம் வீதம் விதை ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
தற்போது சம்பா போகத்தில் விதை உற்பத்தி செய்த 16 விவசாயிகளுக்கு ரூ. 3.74 லட்சம் மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.