மாகி, ஏனாம் பிராந்தியங்களில் வணிக திருவிழா மந்தம்: ஒரு பரிசு கூப்பன் கூட விநியோகம் செய்யவில்லை
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் வணிக திருவிழா களை கட்டியுள்ளது. இதுவரை 18 லட்சம் பரிசு கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மாகி, ஏனாம் பிராந்தியங்களில் ஒரு பரிசு கூப்பன் கூட விநியோகம் செய்யாததால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா, 'புதுச்சேரி ஷாப்பிங் பெஸ்ட்டிவல்' என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்தி அசத்தலான பரிசுகளை, வழங்கி வருகின்றது. இந்தாண்டிற்கான புதுச்சேரி வணிக திருவிழா கடந்த அக்டோபர் துவங்கி நடந்து வருகின்றது.
வணிக திருவிழாவில் பங்கேற்றுள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரி பிராந்தியத்தில் இதுவரை 13 லட்சம் பரிசு கூப்பன்களும், காரைக்காலில் 5 லட்சம் பரிசு கூப்பன்கள் என 18 லட்சம் பரிசு கூப்பன்களை பொதுமக்களுக்கு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போட்டி போட்டிக்கொண்டு பரிசு கூப்பன்களுடன் பொருட்களை வாங்கி சென்று, அதிஷ்ட குலுக்கலுக்கான நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதேபோல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகை காலங்களை உள்ளடக்கி மொத்தம் 102 நாட்களுக்கு இத்திருவிழா நடத்த திட்டமிட்ட சூழ்நிலையில் கணிசமான வருவாய் கிடைக்கும் என புதுச்சேரி அரசும் காத்திருக்கின்றது.
ஆனால் அரசின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மட்டும் தான் விறுவிறுப்பாக வணிக திருவிழா நடந்து வருகின்றது. மாகி, ஏனாமில் ஒரு பரிசு கூப்பன் கூட விநியோகம் செய்யப்படவில்லை. அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த வணிக திருவிழாவில் பங்கேற்க ஆர்வம் இல்லாமல் உள்ளன.
மண்டல நிர்வாகங்களும் எந்த முயற்சி எடுக்காமல் மவுனமாக உள்ளனர். இந்த இரண்டு பிராந்தியங்களிலும் தலா 2.5 லட்சம் வீதம் 5 லட்சம் பரிசு கூப்பன்கள் விநியோகிக்க திட்டமிட்டு இருந்ததால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வணிக திருவிழாவில் பரிசு கூப்பன்கள் 40 லட்சம் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பொருட்கள் வாங்கும் ஒரு நபருக்கு 1 கூப்பன் வினியோகித்தாலும், 40 லட்சம் கூப்பன்களை வணிகர் திருவிழாவில் சுலபமாக விநியோகம் செய்யப்பட்டு விடும் என்பதால், வணிகர் திருவிழாவில் குறைந்த பட்சம் ரூ. 400 கோடிக்கு வியாபாரம் நடைபெறும். இதன் மூலம் மாநில அரசுக்கு 60 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என புதுச்சேரி அரசு கணக்கு போட்டுள்ளது.
ஆனால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் ஆர்வம் இல்லாத சூழ்நிலையில் 60 கோடி வரி வருவாய் இலக்கினை எட்டுவது கடினமே. இன்னும் 1.5 மாதம் மட்டுமே உள்ள சூழ்நிலையில், மண்டல அளவில் நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை முடுக்கி விட்டால் மட்டுமே மாகி, ஏனாமில் வணிக திருவிழா களை கட்டும், வருவாய் இலக்கினையும் எட்ட முடியும், இதற்கான நடவடிக்கையை கவர்னர், முதல்வர், சுற்றுலா துறை அமைச்சர் இணைந்து எடுக்க வேண்டும்.
புதுச்சேரி வணிக திருவிழாவில் கடந்த காலங்களை காட்டிலும் அசத்தலான பரிசுகளை வழங்க அரசு அறிவித்துள்ளது. முதல் பரிசாக 40 பேருக்கு 2.48 கோடி ரூபாய் அளவிற்கு 40 கார்கள் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசாக 80 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 80 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 9 கோடி ரூபாய்க்கு 85 ஆயிரம் அசத்தலாக பரிசுகள் வழங்கப்பட உள்ளது.