பி.எஸ்.என்.எல்.,நெட் ஒர்க் துண்டிப்பால் பாதிப்பு
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பி.எஸ்.என்.எல்.,நெட் ஒர்க் சேவை 24 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்தனர்.
நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் அதிகளவு பி.எஸ்.என்.எல்.,சேவையை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு துண்டிக்கப்பட்டது. மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்டு நேற்று மதியம் 12:10 மணியளவில் சேவை இயங்கியது.
இதனால் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பாலுார், சன்னியாசிப்பேட்டை, திருமாணிக்குழி, கீழ்அருங்குணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மொபைல் மற்றும் ஏ.டி.எம்.,சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இதுபோன்ற பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆக., 20ம் தேதி கெடிலம் ஆற்று பாலத்தின் அடியில் இருந்த கேபிள் தீப்பிடித்து எரிந்ததால் 2 நாட்கள் வேலை செய்யாமல் அவதியடைந்தனர்.
இதுபோன்ற நேரங்களில் பழுதுநீக்கம் செய்ய வரும் பணியாளர்கள் தற்காலிகமாக இணைப்பு கொடுத்து விட்டு செல்வதோடு சரி. மீண்டும் பழுதை முழுமையாக சரி செய்வது கிடையாது.
இதனாலே இதுபோன்று அடிக்கபடி பிரச்னை இருந்து வருகிறது. ஆகையால் அதிகாரிகள் பி.எஸ்.என்.எல்., பிரச்னையை சரியான முறையில் சரி செய்து, தடையின்றி நெட்ஒர்க் சேவையை வழங்கிட வேண்டும்.