சுகாதாரமான குடிநீர் வழங்க ரூ. 500 கோடி செலவில் திட்டம்
முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நல்ல குடிநீர் வழங்க ரூ. 500 கோடி செலவிட திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.
முதலியார்பட்டை சுதானா நகரில் நடந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்புவிழாவில் அவர் பேசியதவாது; மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பது அரசு அக்கறை. புதுச்சேரி கடல் பக்கத்தில் உள்ளது. விவசாயம் குடிநீர் அனைத்திற்கும் போர்வேல் மூலம் தண்ணீர் எடுப்பதால் உப்பு தண்ணீர் புகுந்து விட்டது. டி.டி.எஸ் அளவு அதிகமாக இருப்பதால், பல வழிகளில் நல்ல தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடல் நீரை சுத்திகரித்தல், ஏரி, ஆறுகள் அருகில் போர்வேல் அமைத்து தண்ணீர் கொண்டு வரலாமா என திட்டமிட்டு வருகிறது. நல்ல குடிநீர் வழங்க ரூ. 500 கோடி வரை செலவிட திட்டமிட்டுள்ளோம்.
பரிச்சார்த்த முறையில் ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கும் தண்ணீரை ரூ. 7 கோடி மதிப்பில் அங்கியே சுத்தம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். அத்திட்டம் வெற்றி பெற்றால் மற்ற ஆழ்துளை கிணறுகள் அருகிலே சுத்திகரித்து தண்ணீர் வழங்கப்படும்.
புதுச்சேரியில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. நகர பகுதியில் தனி நபருக்கு ஒரு நாளைக்கு 140 லிட்டர், கிராமப்பகுதியில் 80 முதல் 90 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. நிலத்தடி நீரில் உப்பு தண்ணீர் கலப்பதால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.