2 மணி நேரம் துடிக்காத இதயம்; உயிர்ப்பித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்; ராணுவ வீரருக்கு மறுவாழ்வு!
புவனேஸ்வர்: இதயத்துடிப்பு நின்று 2 மணி நேரம் ஆன ராணுவ வீரரை மீண்டும் உயிர்ப்பித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டத்தில் உள்ள ஒடபாலா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபகந்த். மாரடைப்பு வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவரை, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் சிகிச்சை அளித்த நிலையில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துடிப்பு செயலிழந்த நிலையில் இருந்த அவரை, நீண்ட நேரம் போராடி அவரை டாக்டர்கள் காப்பாற்றினர்.
அவருக்கு சிகிச்சை அளித்த, டாக்டர் ஸ்ரீகாந்த் கூறியதாவது: சுபகந்த் இதய துடிப்பு நின்றுவிட்டது. எங்கள் முன் இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, அவர் இறந்துவிட்டார் என்று அறிவிப்பது; இன்னொன்று, eCPR எனப்படும் முறையில் முயற்சித்துப் பார்ப்பது.
வேறு வழியில்லாத சூழலில், எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR முறை சிகிச்சை அளித்தோம்.
30 நிமிடம் கழித்து, அவரது இதய செயல்பாடு மேம்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் துடிப்பே இல்லாமல் இருந்த அவரது இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது. சுபகந்த் இதய துடிப்பு 96 மணி நேரத்தில், சீரானது. கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர்கள் நமக்கு கடவுள்
நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் டாக்டர்களை பாராட்டினர். "இது ஒரு அதிசயம் ஒன்றும் இல்லை. நாங்கள் டாக்டர்களுக்கு எல்லாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மேலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று தொடர்ந்து சொன்னார்கள்.
டாக்டர்கள் தான் நமக்கு கடவுள். அவர்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினர், ”என்று சுபகந்த் தாயார் மினாட்டி சாஹூ கூறினார். இப்போது, சுபகந்த் அறுவை சிகிச்சைக்குப் பின் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறுகையில், இது ஒரு மைல்கல். நோயாளியின் இதயம் துடிப்பு நின்று, 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்றார்.