5,000 பேர் அனுப்புவது தீர்வல்ல... பிரதமரும் மணிப்பூர் போகணும்! ப.சி. வலியுறுத்தல்

77

புதுடில்லி; பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாஜி மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து கோரி மெய்டி சமூக மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து மெய்டி சமூகத்தினருக்கும், கூகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் எழுந்து வன்முறை வெடித்தது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.


முதல்வரின் வீடு, அரசு சொத்துகள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் தாக்கப்பட்டன. வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளதால் அங்கு கூடுதலாக 5,000 கூடுதல் ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது.


இந்நிலையில் கூடுதல் படையை அனுப்புவது பிரச்னைக்கு தீர்வல்ல, பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை விவரம் வருமாறு; மணிப்பூரில் மேலும் 5,000 வீரர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காணும் வழியல்ல. முதல்வர் பைரேன் சிங் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்டு அவரை பதவி நீக்கம் செய்வதே அறிவார்ந்த செயல்.
உண்மையான பிராந்திய சுயாட்சியை கொண்டிருந்தால் மட்டுமே மெய்டி, கூகி, நாகா மக்கள் ஒன்றாக வாழ முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


எனவே, பிரதமர் தமது பிடிவாதத்தை கைவிட்டு, மணிப்பூர் சென்று மக்களிடம் பேசி, அவர்களின் குறைகள், விருப்பங்களை கேட்க வேண்டும். இதுவே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும்.
இவ்வாறு ப. சிதம்பரம் தமது பதிவில் கூறி உள்ளார்.

Advertisement