இருவரை கொன்ற கோவில் யானை; புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு!
திருசெந்தூர்: திருசெந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, தெய்வானை என்ற யானை உள்ளது. சுவாமி வீதி உலாவின் போது, முன்பாக சென்று வரவும், மற்ற நேரங்களில் கோவில் முன்பாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பணியிலும், இந்த யானை ஈடுபட்டு வந்தது.
யானை பராமரிப்பு பணியில் பாகன்கள் செந்தில், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். உதவி பாகனாக திருச்செந்துார் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த உதயகுமார், 46, இருந்து வந்தார்.
நேற்று பிற்பகலில் யானை கட்டிய மண்டபத்திற்கு உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பழுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன், 45, என்பவரும் சென்றுள்ளனர்.
மண்டபத்திற்குள் வெளி ஆளான சிசுபாலன் நுழைந்ததை கண்டதும், ஆக்ரோஷமான யானை, திடீரென அவரை தாக்கியது. உடனே, உதயகுமார் யானையை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவரை துதிக்கையால் துாக்கி வீசியது. இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, மண்டபத்திற்குள் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
யானையின் குடில் அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
'யானை உணவு சாப்பிடவில்லை, தண்ணீர் குடிப்பதுடன் இலைகளை மட்டுமே உண்கிறது என பாகன் தெரிவித்தார். யானை தெய்வானையின் குடிலைச் சுற்றி தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் கோவில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.