பக்கவாதம் பாதித்தவர்கள் இனி நடக்கலாம்! கொரிய ஆராய்ச்சி கழகத்தின் சூப்பர் கண்டுபிடிப்பு

2

சியோல்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்து நடக்கும் வகையில் ரோபோ தொழில்நுட்பத்தை கொரியா அறிமுகப்படுத்தி இருக்கிறது.



உலக நாடுகளில் தற்போது பக்கவாதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. பக்கவாதம் வராமல் தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வும் பல தருணங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கு 3வது காரணமாக பக்கவாத நோய் உள்ளது.

இந்த நோயில் இருந்து தப்பித்தாலும் அதன் தாக்கம் காரணமாக, 3ல் ஒரு பங்கு பேர் செயல்பட முடியாமல் நிரந்தர இயலாமைக்குச் சென்றுவிடுகின்றனர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளவர்களின் நலன்களுக்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய ரோபோ தொழில்நுட்பம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் நடந்து செல்ல ஏதுவாக இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இது ஒருவகையான கவசம் என்றே சொல்லலாம்.

பக்கவாத பாதிப்பால் நடக்க முடியாதவர்கள் இந்த ரோபோ கவசத்தை தமது உடலின் முன் பகுதியில் மாட்டிக் கொள்ள வேண்டும். சக்கர நாற்காலியில் இருந்தவாறே கால்களை மெல்ல நகர்த்தி, ரோபோவின் கால் பகுதி உள்ளே பொருத்திக் கொள்ள வேண்டும். பின்னர், நெஞ்சு பகுதியை முன்னோக்கி உந்தினால் போதும். அந்த ரோபோ அப்படியே நம்மை ஒரு தாய் குழந்தையை அரவணைப்பது போல் மெல்ல அணைத்து கொள்ளும்.

அடுத்த சில விநாடிகளில் கவச உடையுடன் காணப்படும் அந்த ரோபோ பாதிக்கப்பட்டவரை அப்படியே இழுத்து மெதுவாக நடக்க வைத்துவிடும். சில அடிகள் நடந்து போனால் போதும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கைத்தடியை வீசிவிட்டு நடக்கலாம். வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய ஒருவரை இந்த ரோபோ, அழகாக பிடித்து நடக்க வைக்கிறது. இதற்கு யாருடைய தயவும், காத்திருப்பு என்பதும் தேவையில்லை.

பக்கவாதம் பாதித்து நடக்க முடியாதவர்களுக்கு இந்த ரோபோ மிக பெரும் பயனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோ கவசம் உலகில் உள்ள லட்சக்கணக்கான பக்கவாத நோயாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் என்றே கூறலாம்.

Advertisement