ஓட்டுக்கு பணம்: மஹாராஷ்டிராவில் ரூ. 5 கோடியுடன் சிக்கிய பா.ஜ., பிரமுகர்

19

மும்பை: வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சொகுசு ஹோட்டலில் ரூ. 5 கோடி பணத்துடன் பா.ஜ., பிரமுகர் சிக்கிய சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.

இம்மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு நாளை (நவ.20) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைமையில் மஹாயுதி கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி களத்தில் உள்ளது.

நேற்று (1811.2024) பிரசாரம் ஒய்ந்த நிலையில், பல்ஹார் மாவட்டம் விரார் என்ற இடத்தில் இன்று (19.11.2024) பகுஜன் விகாஸ் அகாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் சொகுசு ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தார்.

அப்போது ஹோட்டல் அறையில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் வினோத் தவாடே, மற்றும் பா.ஜ, எம்.எல்.ஏ., ராஜன் நாயக் ஆகியோர் கட்டுக்கட்டாக பணத்துடன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வீடியோ எடுக்கும் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.

பணத்துடன் கையும் களவுமாக வினோத் தவாடே சிக்கியதால், அவர்களிடம் வாக்குவாதம் செய்து சமாளித்தார். தகவலறிந்த போலீசார் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி தொண்டர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதன் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் காங். பதிவேயற்றியது. வினோத் தவாடேயிடமிருந்து மொத்தம் ரூ. 5 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement