ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: தாய்லாந்தில் 3 நாட்களாக தவிக்கும் பயணிகள்

5

புக்கெட்: தாய்லாந்திலிருந்து டில்லிக்கு 100 பேருடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.


நவம்பர் 16ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம், தாய்லாந்தில் இருந்து டில்லிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆறு மணி நேரம் தாமதமாகும் விமான அதிகாரிகள் பயணிகளிடம் தெரிவித்தனர்.


விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருக்க வைத்த பின்னர், விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 100 பயணிகளில் முதியவர்களும் குழந்தைகளும் அடங்குவர். சிறிது நேரம் கழித்து, விமானம் பறக்கத் தயார் செய்யப்பட்டது.

புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் கழிந்த நிலையில், அந்த விமானம் மீண்டும் புக்கெட்டில் தரையிறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மீண்டும் பயணிகளிடம் விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.


''அப்போதிருந்து நாங்கள் புக்கெட்டில் சிக்கி தவித்து வருகிறோம். விமானப் பிரதிநிதிகளிடமிருந்து எங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை'' என்று பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறியதாவது:


நவம்பர் 16ம் தேதி பணி நேரக் கட்டுப்பாடு காரணமாக விமானம் பறக்கவில்லை. நவம்பர் 17 அன்று, விமானம் புறப்பட்ட நிலையில், ஒரு தொழில்நுட்பக் கோளாறு வெளிப்பட்டது. வேறு வழியில்லாத நிலையில், அவசர அவசரமாக தரை இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது. பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 40 பேர் இன்னும் புக்கெட்டில் உள்ளனர். விரைவில் அவர்களையும் திருப்பி அனுப்பி விடுவோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement