மணிப்பூர் மக்கள் நம்பிக்கை இழப்பு: ஜனாதிபதி தலையிட கார்கே வலியுறுத்தல்
இம்பால்: '' மணிப்பூரில் அமைதியை கொண்டு வர உடனடியாக ஜனாதிபதி தலையிட வேண்டும்,'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதி திரவுமதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்களின் சோகம் தொடர்ந்து கொண்டு வந்துள்ளது.மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
ஒவ்வொரு நாளும், சொந்த மண்ணிலேயே மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். எந்த உதவியும் கிடைக்காமல் 540 நாட்களாக உதவியற்றவர்களாகவும், தனிமையில் இருப்பதை போலவும் உணர்கின்றனர்.தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்த மக்கள், பிரதமர் மற்றும் மாநில முதல்வர் மீது நம்பிக்கையையும் இழந்துவிட்டனர்.
2023ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. மாறாக எதிர்க்கட்சி தலைவர் 3 முறை சென்றுள்ளார். நானும் சென்றுள்ளேன். அம்மாநிலத்திற்கு பிரதமர் செல்ல மறுப்பதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.
நாட்டின் , ஜனாதிபதி என்ற முறையிலும், அரசியல்சாசனத்தின் பாதுகாவலர் என்ற வகையிலும், மணிப்பூர் மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்காக, இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும். இதன் மூலம், மணிப்பூர் மக்கள் அமைதியாக வாழ முடிவதுடன், அவர்கள் வீடுகளின் பாதுகாப்பாகவும், கவுரவமாகவும் வாழ முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்