ரூ.100 கோடி 'சைபர்' மோசடி டில்லியில் சீனர் கைது
புதுடில்லி, தற்போது பார்க்காமலேயே ஒருவருக்கு ஒருவர், ஏன், பலருடன் ஒருவர் பழகும் வாய்ப்பை, சமூக வலைதளங்கள் வழங்குகின்றன.
இதுபோன்ற ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி, நாம் பார்க்காத ஒருவருடன் தொழில் செய்ய முடியும் என்பதை நம்பி, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 17 பேர், 100 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் சிறிய முதலீடு செய்தால், பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என, 'வாட்ஸாப்' சமூக வலைதளத்தில் ஆசை வார்த்தைக் கூறும் செய்தியை நம்பி, டில்லியைச் சேர்ந்த சிலர், பேராசையில் முதலீடுகள் செய்துள்ளனர்.
இவ்வாறு முதலீடு செய்த சுரேஷ் கோலிசியில் அச்சுதன் என்பவர், 43.5 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக டில்லி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, டில்லியைச் சேர்ந்த, ஒரு பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு இந்த பணம் மடைமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவரின் வாட்ஸாப் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போதுதான், அந்த வாட்ஸாப் எண், நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த பாங்க் சென்ஜின் என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, டில்லியில் அவரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியபோதுதான், சைபர் குற்றப்பிரிவுக்கு வந்த, மேலும் 16 புகார்களிலும், இதே மொபைல் எண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தீவிர விசாரணையில் இந்த அனைவரிடமும் மோசடி செய்தது பாங்க் சென்ஜின் என்பது தெரியவந்தது. மொத்தம் கணக்கிட்டு பார்த்தால், 100 கோடி ரூபாய் அளவுக்கு சர்வசாதாரணமாக அவர் மோசடி செய்துள்ளார்.
அவருக்கு உடந்தையாக மேலும் சிலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திரா மற்றும் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ள சில சைபர் மோசடிகளிலும் பாங்க் சென்ஜின்னுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக, தனியாக விசாரணை நடந்து வருகிறது.