தேவாரம் - போடி வரை 18ம் கால்வாய் நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

போடி : தேவாரம் முதல் போடி வரை 18 ம் கால்வாயை நம்பி உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையிலில் இருந்து தேவாரம், போடி பகுதிகளுக்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் தேவாரம், பொட்டிப்புரம், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி வழியாக போடி பரமசிவன் கோயில் பின்புறம் வரை 18ம் கால்வாய் நீர் வந்தடையும். இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர் நிரம்புவதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்., மாதத்தில் பொதுப்பணிதுறை மூலம் 18ம் கால்வாய் நீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் 18ம் கால்வாய் நீரை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தேவாரம் முதல் போடி வரை உள்ள 18ம் கால்வாய் உள்ள இணைப்பு கால்வாய்களை தூர் வாரவும், பொட்டிபுரம், ராசிங்காபுரம் முதல் போடி வரை உள்ள குளங்கள் நிரம்பும் வகையில் 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement