ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி முன்ஜாமின் மனு முடித்து வைப்பு
சென்னை:முன்ஜாமின் கோரி, ஹிந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கோவையில், அக்.,27ல், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட வார இதழை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்சி இளைஞர் அணி தலைவரும், அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி பங்கேற்றார். அப்போது, வார இதழ் ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, ஓம்கார் பாலாஜி மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட இரு பிரிவுகளின் கீழ், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
அப்போது, 'மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்' என்ற நீதிபதி, அதுவரை காவல் துறை கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வாய்மொழியாக உத்தரவிட்டார்.
கடந்த வாரம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஓம்கார் பாலாஜி அவரது மனுவை மாற்றி தாக்கல் செய்ய சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முன்ஜாமின் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, அன்றைய தினம் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், ''கடந்த 13ல் மனுதாரர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். எனவே, முன்ஜாமின் கோரிய மனு செல்லாததாகி விட்டது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.