மாத்திரை வாங்க ஓரிடம்; கவர் வாங்க வேறிடம்; இரண்டு முறை வரிசையில் நிற்கும் கொடுமை

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.,) வளாகத்தில் மாத்திரை வாங்கவும், அதற்கு கவர் வாங்க மற்றொரு வரிசையுமாக இரண்டு இடங்களில் நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.


சிறுநீரகவியல் துறை, குடல் இரைப்பை பிரிவு, மூளை நரம்பியல் உட்பட ஆறு பிரிவுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10:00 முதல் 12:00 மணி வரையான புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் காணப்படும். ஒவ்வொரு வார்டிலும் 25க்கு மேற்பட்ட இருக்கைகள் இருந்தாலும் காரிடாரைத் தாண்டி நோயாளிகள் வரிசையில் நிற்கின்றனர்.


நிறைய பேருக்கு மாதக்கணக்கில் மாத்திரை சாப்பிட டாக்டர்கள் சீட்டில் பரிந்துரைக்கின்றனர். இந்த சீட்டுடன் மாத்திரை வாங்கும் இடத்திற்கு சென்றால் மொத்தமாக மாத்திரைகளை கொடுக்கின்றனர். எந்த மாத்திரையை எந்த நேரத்திற்கு எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று பல முறை கேட்டாலும் மருந்தக பணியாளர்கள் முறையாக பதில் சொல்வதில்லை.

கேட்டால் கண்ணாடி தடுப்பு இருப்பதால் சத்தமாக பேச முடியாது என்கின்றனர். மாத்திரை வாங்கும் வரிசைக்கு முன்புறம் மாத்திரைகளுக்கு கவர் போட்டு வாங்குவதற்கு ஒரு வரிசை உள்ளது என்பதை கூட நோயாளிகளிடம் சொல்வதில்லை.

சிலர் பொறுமையாக சில நிமிடங்கள் நின்று பணியாளர்கள் மெல்ல பேசுவதை விட்டு அடுத்த கவுண்டருக்கு வரிசையில் செல்கின்றனர்.

அங்கு நோயாளியின் நோட்டை பார்த்து ஒவ்வொரு கவரிலும் மாத்திரை இட்டு எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என மற்றொருவர் மெல்லிய குரலில் தெரிவிக்கிறார். நோயாளிகள் தங்களுக்கு உரிய தகவலை பெறுவதற்கு குறைந்தது 10 முறையாவது குனிந்து கண்ணாடி தடுப்பில் உள்ள ஓட்டையின் வழியாக கேள்வி கேட்கின்றனர்.

ஏற்கனவே நோயின் வேதனையில் சிகிச்சை பெற வருபவர்கள் வரிசையிலும் நீண்ட நேரம் அவஸ்தையுடன் நிற்கின்றனர். அவர்களிடம் பணியாளர்கள் குறைந்தபட்ச கரிசனமாவது காட்ட வேண்டும்.

கண்ணாடி தடுப்புக்கு பதிலாக இரும்பு கம்பி வலை பொருத்தினால் நோயாளி பேசுவதையும் பணியாளர் பேசுவதையும் தெளிவாக கேட்க முடியும். அதேபோல ஒரே கவுண்டரிலேயே மாத்திரைகளுக்கு கவர் போட்டு எழுதித்தரவும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement