வ.புதுப்பட்டி பேரூராட்சி 13 வார்டு விசிட்
வத்திராயிருப்பு : வா.புதுப்பட்டி பேரூராட்சி 13வது வார்டில் குறுகிய ரோட்டால் விபத்து அபாயம், சேதமடைந்த ரோட்டால் விவசாய நிலத்திற்கு செல்வதில் சிரமம், சேதமடைந்து செயல்பட முடியாத நிலையில் உள்ள சுகாதார வளாகம், ஓடையை கடக்க பாலம் இல்லாமல் சிரமம் போன்ற பிரச்சனைகளால் மக்கள் சிரமமப்படுகின்றனர்.
மன்னர் திருமலை தெரு, கிராம முன்சீப் தெரு, கான்சாபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகள் கொண்டது இந்த வார்டு. இதில் கான்சாபுரம் மெயின் ரோடு போதிய அகலமின்றி இருப்பதால் கனரக வாகனங்கள் வரும்போது டூவீலர்களில் செல்பவர்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.
மன்னர் திருமலை தெருவில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாறுகால் கட்டி ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனை தரமாகவும், விரைவாகவும் செய்து தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதே தெருவில் இருந்து தெற்கே மலை அடிவார விவசாய நிலங்களுக்கு செல்லும் தார் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நீர்வரத்து ஓடையில் சமர் அணை சேதம் அடைந்து உள்ளது.
உடையார்பட்டி ஓடையில் இருந்து மன்னர் திருமலை தெருவிற்கு செல்லும் பாதையில் பாலம் இல்லாததால் மழை நேரத்தில் சகதி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சே தமா ன ரோ டு
சுந்தர்ராஜன், குடியிருப்பாளர்: மன்னர் திருமலை தெருவில் இருந்து மலையடிவார விவசாய நிலங்களுக்கு செல்லும் தார் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து சல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை டூவீலரில் கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த ரோட்டை சீரமைத்து புதிதாக போட்டு தர வேண்டும்.
-பாலம் இல்லாததால் சிரமம்
பாலமுருகன், விவசாயி: கான்சாபுரம் மெயின் ரோட்டில் இருந்து மன்னர் திருமலை தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள உடையார் பட்டி நீர்வரத்து ஓடையில் பாலம் இல்லாததால் மழை நேரத்தில் சகதி ஏற்படுகிறது. எனவே, அந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
ராணி, வார்டு உறுப்பினர்: மன்னர் திருமலை தெருவில் ரோடு, வாறுகால் கட்டுதல், கான்சாபுரம் மெயின் ரோட்டில் சிறு பாலம் கட்டுதல், விவசாய நிலத்துக்கு செல்லும் ரோட்டை சீரமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தில் தெரிவித்துள்ளேன். இதில் தற்போது மன்னர் திருமலை தெருவில் ரோடு, வாறுகால் கட்டப்படுகிறது. தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
-குறைகள் சரி செய்யப்படும்
சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: பல ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் திருமலை தெருவில் ரோடு, வாறுகால் அமைக்கப்படுகிறது.
கான்சாபுரம் மெயின் ரோட்டில் இருந்து தெருவிற்கு வருவதற்கு சிறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு உறுப்பினர் மற்றும் மக்கள் சுட்டிக் காட்டும் கோரிக்கையை மீது உடனடி நடவடிக்கை எடுத்து குறைகள் சரி செய்யப்படும்.