திருமலை நாயக்கர் மகாலில் தர்பால் ஹால் தயார் லேசர் லைட் ஷாே ஆரம்பிப்பது எப்போது
மதுரை : தொல்லியல் துறை சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மகாலின் முன்புற தர்பால் ஹாலின் தரைத்தளம் பக்கவாட்டு தளங்கள் தயாரான நிலையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகம் சார்பில் லேசர் லைட் ேஷா பணியை விரைவில் துவங்க வேண்டும்.
மகாலின் திறந்தவெளி தர்பால் ஹாலில் 200 இருக்கைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மன்னர் திருமலை நாயக்கரின் வரலாறு குறித்த ஒளி ஒலிக்காட்சி நடத்தப்பட்டு வந்தது. பாரம்பரிய தரைத்தளம் ஆங்காங்கே சிதிலமடைந்ததால் ரூ.3.75 கோடி செலவில் தொல்லியல் துறை சார்பில் பழமை மாறாமல் அதே போன்ற கற்களைக் கொண்டு தரைத்தளம் அமைக்கும் பணி கடந்தாண்டு துவங்கியது.
இதனால் மாலை 6:45 மணி, இரவு 8:00 மணிக்கு நடத்தப்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் ஒளி ஒலிக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. தலா 45 நிமிடங்களுக்கு தமிழ், ஆங்கில மொழியில் மன்னர் வரலாறாக சொல்லப்பட்டது. இந்த 45 நிமிட கதையானது சுருக்கப்பட்டு புதிய கதை உருவாக்கப்பட்டுள்ளது. தர்பார் ஹாலில் ஏற்கனவே உள்ள லைட் பிட்டிங்குகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன. பழைய வண்ண விளக்குகளுக்கு பதிலாக லேசர் முறையில் புதிய ஒளி ஒலிக்காட்சி அமைக்கப்படும் என கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டது.
தர்பார் ஹாலில் மழைநீர் வடிகால் வசதி உட்பட 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் லேசர் லைட் ேஷா அமைக்கும் பணியை சுற்றுலா வளர்ச்சி கழகம் விரைவில் துவக்க வேண்டும்.