திருத்தங்கலில் டெண்டர் விட்டும் துவங்காத பாலம் கட்டும் பணி; : மக்கள் அதிருப்தி

சிவகாசி, : திருத்தங்கல் பேட்டை தெருவில் சேதமடைந்த ஓடை பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்படும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் ஐந்தாவது வார்டு பேட்டை தெரு வழியாக செல்லும் ஓடை சேதம் அடைந்திருப்பதாலும், இதன் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் ஓடையிலேயே குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

இந்நிலையில் ஓடையில் பாலம் கட்டுவதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ. 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஓடையில் பாலம் தடுப்புச் சுவர் அமைப்பதோடு முழுமையாக துார் வரவேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement