ஹிமாச்சல் பவனை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிம்லா : மின் நிறுவனத்தின் நிலுவைத்தொகையை ஹிமாச்சல பிரேதச அரசு செலுத்த தவறியதை அடுத்து, டில்லியில் அம்மாநிலத்துக்கு சொந்தமான ஹிமாச்சல் பவனை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில், செனாப் ஆற்றில், 340 மெகாவாட் செலி நீர்மின் திட்டத்தை, 'செலி ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் லிமிடெட்' என்ற நிறுவனத்துக்கு மாநில அரசு வழங்கியது.


இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு கடிதம் 2009 பிப்., 28ல் வழங்கப்பட்டது. இதையடுத்து, 64 கோடி ரூபாயை அந்நிறுவனம் முன்பணமாக செலுத்தியது. ஆனால், திட்டம் நிறைவேறவில்லை.

ஒதுக்கீடு கடிதத்தை ரத்து செய்த ஹிமாச்சல் அரசு, முன்பணத்தை வழங்கவில்லை. இதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் நிறுவனம் முறையிட்டது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், வட்டியுடன் பணத்தை செலுத்தும்படி ஹிமாச்சல் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மாநில அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த செலி ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் லிமிடெட் நிறுவனம், ஹிமாச்சல் அரசுக்கு எதிராக, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

விசாரித்த உயர் நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் முடிவை உறுதி செய்து, முன்பணத்தை வட்டியுடன் டிபாசிட் செய்யும்படி, அரசுக்கு 2023 ஜன., 13ல் உத்தரவிட்டது.

பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மனு தாக்கல் செய்த நாள் முதல், 7 சதவீத வட்டி என கணக்கிடப்பட்டு, தற்போது அந்த தொகை, 150 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


இந்த வழக்கு, ஹிமாச்சல் உயர் நீதிமன்ற தனி நீதிபதி அஜய் மோகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, டில்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள ஹிமாச்சல் அரசுக்கு சொந்தமான ஹிமாச்சல் பவனை, நிலுவைத்தொகை செலுத்தாத காரணத்துக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏலத்துக்கு விடலாம் என, நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஹிமாச்சல் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisement