50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யுங்க; டில்லி அரசு உத்தரவு
புதுடில்லி: காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் காற்று மாசு பிரச்னை நிலவி வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம், அங்கு மிக மிக மோசமாக உள்ளது. டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவின் குருகிராம், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் போன்ற நகரங்களிலும், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து புகை மூட்டமாக இருப்பதால், டில்லியில், விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 119 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. 6 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லிக்கு 13 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தது.
இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உத்தரவு அமலாகிறது என டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.