பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி அணிகள் பெயர் பதிவு செய்ய அழைப்பு

தர்மபுரி, டிச. 26-
'தர்மபுரியில், பள்ளிகளுக்கிடையே நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், பங்குபெறும் பள்ளி அணிகள் பதிவு செய்து கொள்ளலாம்' என, தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மார்டின்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தர்மபுரியில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்படும். போட்டியில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்ளலாம். பள்ளி அணிகளை வரும், 31க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். விருப்பமுள்ள பள்ளி அணியினர், தங்களது அணியின் பெயர்களை, 'தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், வாசுகவுண்டர் தெரு' என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, இதே அலுவலகத்தில் வழங்கி அணிகளை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement