பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்.,: தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் சென்னை போலீஸ்!

104


சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை ஆன்லைனில் வெளியிட்ட போலீசார், அதை இப்போது முடக்கியுள்ளனர். யாரேனும் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர் ஏற்கனவே மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பகலில் பிரியாணி கடை நடத்திக் கொண்டு, இரவில் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் சென்று, மாணவிகளை இதுபோன்று பாலியல் சீண்டலுக்கு ஆளாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, போலீஸ் இணையதளத்தில் ஆன்லைனில் வெளியானது. அதில் மாணவியின் பெயர் விவரங்கள் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், போலீசார் அந்த எப்.ஐ.ஆர்., லிங்க்கை முடக்கியுள்ளனர். எப்.ஐ.ஆர்., யாரேனும் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
பெற்றோருக்கும், பல்கலை நிர்வாகத்துக்கும் வீடியோவை அனுப்பி விடுவேன் என்று வன்கொடுமை செய்த குற்றவாளி, மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றியும் போலீஸ் விசாரணை நடக்கிறது.

Advertisement