ஞானசேகரன் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது: அமைச்சர் ரகுபதி விளக்கம்

8

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் தி.மு.க.,வின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கு குறித்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். கைதான ஞானசேகரன் தி.மு.க., சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஞானசேகரன் தி.மு.க,வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அண்ணா பல்கலை பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை ; தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



அவர் தி.மு.க.,வின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சருடன் யாரேனும் புகைப்படம் எடுப்பது சகஜம் தான். எந்த அடையாளத்தையும் அரசு சார்பில் யாரும் தெரிவிக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண்கள் உயர்கல்வி பயில்கிறார்கள். இதை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றால், அது தமிழகம். ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன். பொள்ளாச்சி சம்பவத்தை மறைக்க முயன்றது அ.தி.மு.க., பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவு என்கிறது மத்திய அரசு தரவுகள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement