கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை

ஓசூர், டிச. 26-
கெலமங்கலம் அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால், மக்கள் அலறியடித்து ஓடி வீட்டிற்குள் முடங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த காது கேட்காத கிரி என்ற ஒற்றை யானை, கடந்த வாரம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கிரி, நேற்று காலை ஒன்னுகுறுக்கி கிராமத்திற்குள் புகுந்து, சாலை வழியாக நடந்து
சென்றது.
இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி, வீடுகளை பூட்டி கொண்டு அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கினர். வனத்துறையினர் யானையை விரட்டிய நிலையில், ஜக்கேரி, காடு உத்தனப்பள்ளி வழியாக, போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே யானை சென்றது. அப்பகுதியில் உள்ள
கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை கடந்த யானை, சானமாவு வனப்பகுதி நோக்கி சென்றது. ஏற்கனவே சானமாவு வனப்பகுதியில் இரு யானைகள் தஞ்சமடைந்துள்ள நிலையில், கிரி யானையும் சென்றுள்ளதால், எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கெலமங்கலம் அடுத்த சின்னட்டி அருகே தனியார் பேட்டரி கம்பெனி அருகே தனியார் நிலத்தில் முகாமிட்டிருந்த, 6 யானைகளை, நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் விரட்டிய நிலையில், தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலையை கடந்த யானைகள், பச்சப்பனட்டி, நஞ்சுண்டாபுரம் வழியாக நேற்று காலை தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு
சென்றன.

Advertisement