வீராங்கனைக்கு அரசு வேலை



நாமக்கல், டிச. 26-
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற வாள் விளையாட்டு வீராங்கனை தமிழ்செல்வி, 3 சதவீத இடஒதுக்கீட்டில், கூட்டுறவு துறையின் நாமக்கல் மண்டலத்தில் முதுநிலை ஆய்வாளராக பணி நியமன ஆணை பெற்றார். இதையடுத்து நாமக்கல் கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து, ஆணையை காட்டி வாழ்த்து பெற்றார். இவர், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துாரை சேர்ந்தவர்.
கடந்த, 6 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி வாள் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி பெற்று வந்தார். விடுதியில் தங்கியவாரே பி.இ., மற்றும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் எம்.இ., பயின்று பொறியியல் பெற்றுள்ளார். 2022ல் மாநில அளவில் நடந்த வாள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு செப்., 29 முதல் அக்டோபர், 12 வரை குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement