கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


சேலம், டிச. 26-
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சேலம், அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயம், அழகாபுரம் புனித மைக்கேல், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், கலெக்டர் அலுவலகம் அருகே, சி.எஸ்.ஐ., செவ்வாய்ப்பேட்டை லெக்லர், ஜங்ஷன் துாய பரிசுத்தம் உள்ளிட்ட ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து
பங்கேற்றனர். நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல் ஆத்துார் புனித ஜெயராகினி அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை அருளப்பன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆத்துார் நகர அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. இதில் ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி, நகர் மன்ற குழு தலைவர் உமாசங்கரி, நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கோனேரிப்பட்டி பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

Advertisement