'காம்போசிஷன்' திட்ட வணிகர்களுக்கு மட்டும் வாடகை தொகையில் ஜி.எஸ்.டி., விலக்கு; 'கவுன்சில்' முடிவு குறித்து ஆடிட்டர்கள் விளக்கம்
திருப்பூர் : விற்றுமுதலை 1.5 கோடி ரூபாய் கொண்டவர்கள், நிலையான திட்டத்தில் ஜி.எஸ்.டி., வரி செலுத்தலாம். இதற்கு, 'காம்போசிஷன் ஸ்கீம்' என்று பெயர். இவர்களுக்கு, வாடகையில் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, அக்., 10ம் தேதி முதல், வணிக நோக்கில் இயங்கும் கட்டட வாடகையில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தொழில் அமைப்புகள், வணிகர்கள், வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 21ம் தேதி நடந்த, 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும், 'காம்போசிஷன்' திட்ட வணிகர்களுக்கு மட்டும், வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை என, ஆடிட்டர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன, திருப்பூர் கிளை தலைவர் ஆடிட்டர் செந்தில்குமார் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., செலுத்துபவர்களில், 'காம்போசிஷன்' திட்டத்தில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர்.
அத்தகைய திட்டத்தில் ஜி.எஸ்.டி., செலுத்துபவர்களுக்கு மட்டும், வணிக பயன்பாட்டு கட்டட வாடகைக்கு, ஜி.எஸ்.டி., 18 சதவீதம் (ரிவர்ஸ் சார்ஜ் முறையில்) செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வர்த்தகர்கள், சரக்கு அல்லது சேவை பெறும்போது செலுத்தும் ஜி.எஸ்.டி., வரியை உள்ளீட்டு வரியாக திரும்ப பெறுவதில்லை.
ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் மற்ற வணிகர்கள், செலுத்தும் வாடகையில், 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்; அதை, சட்டத்திற்கு உட்பட்டு உள்ளீட்டு வரியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்டட உரிமையாளர்கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கு வாடகையில் ஏற்கனவே, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
கட்டட உரிமையாளர், ஜி.எஸ்.டி., பதிவு செய்யாதவராக இருந்தால், கடை நடத்தும் வர்த்தகர்கள் அல்லது நிறுவனத்தினர், மாதந்தோறும் வாடகையில், 18 சதவீதம் அளவுக்கு 'ரிவர்ஸ் சார்ஜ்' முறையில் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., கவுன்சிலில், வாடகை கட்டடத்தில் இயங்கும் கலவை திட்ட வணிகர்களுக்கு (காம்போசிஷன்) மட்டும் விலக்கு அளிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கலவை திட்ட வணிகரிடம் வாடகை பெறும் கட்டட உரிமையாளர், ஜி.எஸ்.டி., பதிவு பெறாதவராக இருந்தால், வாடகை வருவாயில், 18 சதவீதம் வரி செலுத்த வேண்டியதில்லை.
மாறாக, ஜி.எஸ்.டி., பதிவு பெற்றவராக இருந்தால், கலவை திட்ட வணிகர் வாடகையுடன், 18 சதவீத வரியை சேர்த்தே செலுத்த வேண்டும்.
இத்தொகையை, பதிவு பெற்ற கட்டட உரிமையாளர் அரசுக்கு செலுத்துவர். வாடகை கட்டடத்தில் இயங்கும் நிறுவனங்கள் செலுத்தும் வாடகை தொகை மீதான, 18 சதவீத வரிவிதிப்பு தொடர்பான பிற விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.