அரசு, காவல் துறை மீது, சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: 'சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அவர்கள் அறிக்கை:



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: டில்லியில் நிர்பயா சம்பவம் நடந்து, 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடப்பது, சட்டம் - ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் பின்நோக்கி தள்ளி இருப்பதையே காட்டுகிறது.



பெண்களுக்கு, கல்வி நிலையங்கள், பணியிடங்களில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு, சட்டம் - ஒழுங்கை கெடுத்துள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம்.


குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுதும் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலை சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், போலீசார், பெண்கள், குழந்தைகள் என, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழலில், தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.



குறிப்பாக, குற்றவாளிகள் தி.மு.க.,வினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.


தலைநகரின் மையப் பகுதியில், இன்ஜினியரிங் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, போலீசாரின் மீதோ, எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உலகப்புகழ் பெற்ற அண்ணாப் பல்கலையில், இப்படியொரு கொடுமை நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதற்கு, இது கொடூரமான எடுத்துக்காட்டு.

தி.மு.க., ஆட்சியில், எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சரியான நேரத்தில் தக்க தண்டனையை, தி.மு.க., அரசுக்கு மக்கள் அளிப்பர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்: இச்சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இது அண்ணா பல்கலை மாணவியர் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது, குறிப்பாக கல்விக்கூடங்களில், மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது, கவலை அளிக்கிறது. கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் மாணவியருக்கு, பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.


தே.மு.தி.க., பொதுச்செய லர் பிரேமலதா: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றால், சமூக விரோதிகளுக்கு அரசின் மீதோ, காவல் துறை மீதோ எந்த பயமும் இல்லை என்பது தெரிகிறது.



இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசும், காவல் துறையும் நீதி வழங்க வேண்டும்.


அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: இச்சம்பவம், அண்ணா பல்கலை மாணவியரின் பாதுகாப்பையும், கேள்விக்குறியாக்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை, மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில், மாணவியர் பாதுகாப்பான சூழலில், கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களில், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்காததால், இதுபோன்ற சம்பவம், செய்தியாக இருந்து கடந்து விடுகிறது.


கடும் தண்டனை இருக்கும் என உளவியல் அச்சம் இருந்தால்தான், இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்கும். நடக்கும் குற்றச் சம்பவங்களில், 90 சதவீதம் போதையில்தான் நடக்கிறது.



ஒழுக்கத்தை கற்பிக்கின்ற வளாகத்திலேயே நடக்கிறது என்றால், நாடு நாடாக இல்லை; அறம் சார்ந்த மக்கள் கூட்டமாக நாம் இல்லை என்று பொருள்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement