கார் விபத்தில் 'ஏர்பேக்' தாக்கி; 6 வயது சிறுவன் உயிரிழப்பு
மும்பை : மஹாராஷ்டிராவில், கார் விபத்தில் ஏர்பேக் விரிவடைந்து தாக்கிய அதிர்ச்சியில், 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா, 6, என்ற சிறுவன், பானிப்பூரி சாப்பிடுவதற்காக, 'வேகன் ஆர்' காரில், தன் தந்தையுடன் கடந்த 22ல் சென்றான். காரின் முன் இருக்கையில், சிறுவன் உட்கார்ந்திருந்தான்.
வாஷி என்ற இடத்தில், இவர்களது காருக்கு முன்னால் சென்ற சொகுசு கார், சாலை தடுப்பில் மோதி துாக்கி வீசப்பட்டது. இந்த காரின் பின்பகுதி, ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா சென்ற காரின் பானெட் பகுதியில் வேகமாக விழுந்தது.
இதில், வேகன் ஆர் காரின் முன் பகுதியில் இருந்த ஏர்பேக் திடீரென விரிவடைந்தது. இதனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா மயக்கமடைந்தான். சிறுவனை மீட்டு, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எனினும், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், சொகுசு காரின் டிரைவரை கைது செய்தனர்.
சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியாவுக்கு உடலில் காயங்கள் இல்லை என்றும், 'பாலிட்ராமா' எனப்படும், திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியே உயிரிழப்புக்கு காரணம் என்றும் டாக்டர்கள் குறிப்பிட்டனர்.
ஏர்பேக்: கார் விபத்துக்கு உள்ளானால், மூளை, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்படாமலிருக்க ஏர்பேக் உதவுகிறது. ஆனால் சில நேரங்களில், விபத்தின் போது அதிவேகத்தில் ஏர்பேக் விரிவடையும் போது, அதிர்ச்சி, மூச்சுத்திணறல் போன்றவற்றால் மரணமும் ஏற்படுகிறது.