ஆப்கன் பயங்கரவாதிகள் முகாம் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

பெஷாவர் : ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத முகாம் மீது, பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 46 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பாகிஸ்தானி தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த 2021ல் ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த பின், பாகிஸ்தானி தலிபான் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத முகாம் மீது, பாகிஸ்தான் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில், அந்த முகாம் அழிக்கப்பட்டதாகவும், பலர் பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விமானங்கள், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தலிபான் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம், குடியிருப்பு பகுதியில் நடத்திய இந்த தாக்குதலில், 46 பேர் உயிரிழந்ததாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என, தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பிட்ரட் கூறியுள்ளார்.

Advertisement