3 ரக ஆரஞ்சு பழங்களுக்கு சீசன்
சென்னை: மூன்று ரக ஆரஞ்சு பழங்கள் சீசன் களை கட்டுவதால், அவை விற்பனைக்காக சந்தைகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கமலா ஆரஞ்சு பழங்கள் அதிகம் விளைகின்றன. இவை இரண்டு பருவங்களில், அறுவடை செய்யப்படும்.
இப்பழங்களுக்கு தற்போது சீசன். இது தவிர, சீனா, எகிப்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து, ஆரஞ்சு பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவை சாத்துக்குடி போன்று தடிமனான தோல் உடையதாக இருக்கும். இவற்றை குளிர்சாதன பெட்டிகளில் பதப்படுத்தி, விற்பனை செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளாக, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 'கின்னு ஆரஞ்சு' பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இவை பார்ப்பதற்கு வெளிநாட்டு ஆரஞ்சு பழத்தின் நிறத்தை ஒத்திருக்கும். கமலா ஆரஞ்சு பழங்களை விட, சற்று கடினமான தோல் கொண்டதாக இருக்கும். தற்போது, கமலா ஆரஞ்சு, கின்னு ஆரஞ்சு பழங்களின் சீசன் களைகட்டி வருகிறது.
இதனால், சென்னை கோயம்பேடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள, முக்கிய சந்தைகளில், இந்த வகை ஆரஞ்சு பழங்களின் வரத்து அதிகரித்துள்ளன. வருகை அதிகரிப்பால், அவற்றின் விலை குறைந்து வருகிறது.
முன்பு ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்ட கமலா ஆரஞ்சு, தற்போது 40 - 50 ரூபாய்க்கும், 'கின்னு' ஆரஞ்சு 60 - 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்த இரண்டு வகை ஆரஞ்சுடன், புது வரவாக தாய்லாந்து நாட்டில் இருந்து, 'டேஞ்சரின்' எனப்படும், மற்றொரு வகை ஆரஞ்சு பழமும் விற்பனைக்கு குவிகிறது.
கின்னு ஆரஞ்சு பழங்களை போன்ற நிறத்தில் உள்ள, 'டேஞ்சரின்' பழங்களில் கொட்டை இருக்காது. அளவில் சிறியதாக இருக்கும். இது ஒரு கிலோ, 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.