அறிவியல் துளிகள்
01. ஈ.எஸ்.ஓ., கெக் தொலைநோக்கிகளை கொண்டு தனுசு ராசி மண்டலத்துக்கு அருகே இரட்டை நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம் பால் வீதியில் உள்ள கருந்துளைக்கு அருகே, இப்படியான இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
02. ஒரு மனிதனை கொல்லக்கூடிய ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை தாங்கும் சக்தி மிக்கது 'டீனோகாக்கஸ் ரேடியோடியூரன்ஸ்' எனப்படும் பாக்டீரியா. இதற்கான காரணத்தை, அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
03. வியாழனின் நிலவான ஐயோவில் தான், நம் சூரியக் குடும்பத்திலேயே மிக அதிகமான எரிமலை வெடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இந்த எரிமலையில் இருந்து வெளிப்படும் குழம்பு, இந்த நிலவின் உட்புறமுள்ள குழம்புக் கடலில் இருந்து வருவதல்ல என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
04. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய புதைபடிவ மாதிரியை, பிரிஸ்டல் பல்கலை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். அதில் அந்த புதைபடிவம், 20.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய -பல்லியினுடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
05. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம், செவ்வாயின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள 'ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலி' பகுதியை படம் எடுத்து அனுப்பியுள்ளது. கரியமில வாயு பனிக்கட்டிகளாக மாறியுள்ளதால், அந்த பகுதிகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.