துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை

பாலைவனத்திற்கு நடுவே வளர்ந்த பிரமாண்டமான நகரம் துபாய். இந்த நகரத்தில் எங்கு சென்றாலும் வாகனங்களில் தான் செல்ல வேண்டும். நடந்து செல்வதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. மொத்த ஜனத்தொகையில் 13 சதவீதம் பேர் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம், அங்கு நிலவும் கடுமையான வெப்பமும், பாலைவன புழுதியும் தான்.

வரும் 2040ம் ஆண்டிற்குள், பாதசாரிகளின் சதவீதத்தை 13ல் இருந்து 25 ஆக உயர்த்துவதற்கு அந்த நாடு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 6,500 கிலோ மீட்டர் நடைபாதையை உருவாக்க இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் 2,300 கி.மீ., நடைபாதை இதில் இணைத்துக் கொள்ளப்படும். இதற்கு, 'துபாய் வாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக துபாய் உலக வர்த்தக மையம், அருங்காட்சியகம், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் 2 கி.மீ., நீளமும், 50 அடி அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். இது, 10 முக்கிய இடங்களை இணைக்கிறது. இதன் மொத்த பரப்பளவில் 30,000 சதுர மீட்டர் நடைபாதை முழுக்கவே, 'ஏசி' முதலிய உபகரணங்களால் குளிரூட்டப்படும். இன்னும் உள்ள 30,000 சதுர மீட்டர் நடைபாதை முழுக்கவே, பசுமையான சூழலில் நிழல் உள்ளபடி அமைக்கப்படும்.

அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இதை செய்ய உள்ளன. முதல்கட்ட பணி 2025யிலிருந்து 2027க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கும், நகரத்தை அழகாக மாற்றவும் இது பயன்படும். இதனால், மக்களின் உடல் நலனும், சுற்றுச்சூழலும் ஒருங்கே காக்கப்படும்.

Advertisement