உருகும் பனியாறு; எல்லையில் தகராறு
புவி வெப்பமயமாதல் குறித்து நீண்ட காலமாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். துருவப் பகுதிகளில் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இது தவிர்த்து, உலகின் பல்வேறு கண்டங்களில் மலைத்தொடர்களின் உச்சியில் உள்ள பனியாறுகளும் மிக வேகமாக மறைந்து வருகின்றன. இதனால், ஒரு புதிய பிரச்னை எழுந்துள்ளது.
பல நாடுகள் இடையே இயற்கை தான் எல்லை வகுத்துள்ளது. மலைத்தொடரோ, கடலோ, ஆறோ, பனியாறோ தான் பெரும்பாலும் இரு நாடுகளிடையே எல்லையாக இருக்கின்றன.
பனியாறுகள் மறைந்து வருவதால், சில நாடுகளிடையே எல்லை வகுப்பதில் குழப்பமும், அதனால் பிரச்னையும் ஏற்கனவே தோன்றிவிட்டன. தற்போது இது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ள நாடுகளில் இந்தப் பிரச்னை நீண்ட காலமாக இருக்கிறது.
சுவிட்சர்லாந்துக்கும், இத்தாலிக்கும் எல்லையாக அமைந்துள்ளவை பனியாறுகள் தான். ஆனால், 2022 - 23ம் ஆண்டுகளில், 10 சதவீத பனியாறுகள் மறைந்துவிட்டன. இதனால், இந்த நாடுகளிலேயே எல்லை பிரச்னை எழுந்தது.
கடந்த 2023 மே மாதமே சுவிட்சர்லாந்து தன் எல்லையை மாற்றி வரைவதற்கு தயாராகிவிட்டது. ஆனால், அதன் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இதை ஏற்றுக்கொள்ள 18 மாதங்கள் ஆகியுள்ளன. இந்த எல்லை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இதுவரை இத்தாலி கையெழுத்திடவில்லை.
நார்வே - ஸ்வீடன், தென் அமெரிக்க கண்டத்தில் சிலி - அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இடையேயும் பனியாறுகள் தான் எல்லை வகுக்கின்றன. இங்கும், அதே பிரச்னையால் எல்லை தகராறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் விட ஆபத்தானது, உலகின் மிக உயரமான போர்க்களம் என்று அறியப்படுகிற சியாச்சினில் பனியாறு உருகி வருகிறது.
இமயத்தில் அமைந்துள்ள இது, பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் புள்ளியாக உள்ளது. இந்த இடத்திலே பனியாறு மறைந்தால், எல்லை பிரச்னை மிகத் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.