மியான்மர் எல்லையில் மோதல் உச்சகட்டம்; எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
டாக்கா: வங்கதேசம்- மியான்மர் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் கிளர்ச்சிப் படையினர், வங்கதேச எல்லைப் பகுதி முழுவதையும் கைப்பற்றி விட்டனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கிளர்ச்சி படையினர் போர் நடத்தி வருகின்றனர். இந்தியா, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கைன் மாநிலத்தில் கணிசமான நிலப்பரப்பை, அரக்கன் ராணுவம் எனப்படும் கிளர்ச்சிப்படை கைப்பற்றி உள்ளது. மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையிலான எல்லைப் பகுதி முழுவதும் அரக்கன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
இரு தரப்புக்கும் போர் உச்சத்தை எட்டி உள்ளதால், இந்திய எல்லையை நோக்கி கிளர்ச்சிப்படையினரும், போரால் பாதிக்கப்பட்ட மக்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை மியான்மருடன் 1,643 கி.மீ., துாரம் எல்லையை பகிர்கின்றன.
இதன் வழியாக, லட்சக்கணக்கான அகதிகள் நம் எல்லைப் பரப்பிற்குள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்கும் நோக்கில், மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
மியான்மர் எல்லை நிலவரம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மியான்மர் உள்நாட்டு போர் காரணமாக இந்தியாவுக்குள் அகதிகள் ஊடுருவும் அபாயம் உள்ளது. நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விழிப்புடன் இருக்கிறோம். மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மியான்மரின் கிளர்ச்சிக்குழுக்கள் நிதி திரட்டுவதற்காக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுவும் இந்தியாவிற்கு மற்றொரு சவாலாக உள்ளது.